Home Jaffna News சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் – யாழ். போதனா வைத்தியசாலை தாதிக்கு பயணத் தடை!

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் – யாழ். போதனா வைத்தியசாலை தாதிக்கு பயணத் தடை!

28

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுக்காகச் சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை சம்பவத்தில் வைத்தியசாலை தாதி ஒருவருக்கு யாழ். நீதிமன்றம் பயணத் தடை விதித்துள்ளது.

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரின் இடதுகையின் மணிக்கட்டுக்கு கீழ் அகற்றப்பட்டது.

சிறுமியின் கை அகற்றப்பட்டமைக்கு விடுதியில் கடமையில் இருந்தவர்களின் அலட்சியமும், தவறுமே காரணம் என்று சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட கனுலா ஊடாக தவறாக முறையில் ஊசி மருந்து செலுத்தப்பட்டமையால் சிறுமியின் கையில் இரத்த ஓட்டம் தடைப்பட்டு கையைத் துண்டிக்க வேண்டி ஏற்பட்டது என்றும் கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், சிறுமியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அண்மைக் காலங்களில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட அரச மருத்துவமனைகளில் மருத்துவத் தவறுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.

அவை தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருந்தபோதும், விசாரணை அறிக்கைகள் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமையத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் தாதி ஒருவருக்குப் பயணத் தடை விதித்துள்ளது.

அத்துடன் விசாரணைக் குழு ஒன்றை அமைப்பதற்கு அறிவுறுத்தியுள்ளதுடன், அதற்கான சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது.

Previous articleதடுப்பூசி செலுத்தப்பட்டதில் மேலுமொரு குழந்தை உயிரிழப்பு
Next articleயாழ் வைத்தியசாலையில் தாதியர் காவலாளிகள் அடாவடி..!